இந்நாட்டின் கப்பல்துறை கல்வியில் முன்னேற்றத்தினை மேற்கொள்வதற்காக மஹபொல துறைமுக மற்றும் கடல்சார் கல்வி கலாசாலை மற்றும் ரக்னா லங்கா நிறுவனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கடந்த ஜூன் மாதம் 09 ஆம் திகதி இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க மற்றும் உப தலைவர் – முகாமைத்துவ பணிப்பாளர் W.S. வீரமன் அவர்களும் கையெழுத்திட்டதுடன் ரக்னா லங்கா நிறுவனம் சார்பில் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி மேஜர் தூலத் விஜேதிலக்க மற்றும் பணிப்பாளர் பயிற்சி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணிப்பாளர் சபையினால் முன்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய மஹபொல துறைமுக மற்றும் கடல்சார் கல்வி கலாசாலையானது ஏனைய நிறுவனங்களுடன்இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன் மற்றுமொரு கட்டமாக இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கருத முடியும். இந்நிகழ்வில் உப தலைவர் – முகாமைத்துவ பணிப்பாளர் W.S. வீரமன் உட்பட இலங்கை துறைமுக அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் ரக்னா லங்கா நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்நாட்டின் கப்பல்துறை மற்றும் கடல்சார் கல்வியை விருத்தி செய்வது சம்பந்தமாக இது போன்ற சுமார் 12 புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மஹபொல துறைமுக மற்றும் கடல்சார் கல்வி கலாசாலையானது ஏனைய பல்வேறு தரப்பினருடனும் இணைந்து கைச்சாத்திட்டுள்ளதுடன் செயற்திட்டங்களும்நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

