எங்கள் செய்தி வலைத்தளத்தின், தமிழ்ப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்த ஏ.சி.எம்.கே.ரஹ்மான் அவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக இயற்கையெய்தியது தாங்கமுடியாத வேதனையைத் தரக்கூடிய ஒரு நிகழ்வாகும். அன்னாரது பிறந்த இடமான சம்மாந்துறையில், மஸ்ஜிதுல் சலல் மையவாடியில், அன்னாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இலங்கை துறைமுக அதிகார சபையில் உதவி முகாமையாளராக சேவையாற்றிய அவர், எமது நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காகப் பணிபுரிந்த ஒரு அதிகாரியாவார். விசேடமாக கோவிட் 19 தொற்றின் காரணமாக சிரமப்பட நேர்ந்த சந்தர்ப்பத்தில் அதிகளவு தியாக உணர்வுடன் இலங்கை துறைமுக திட்டங்களை பூரணப் படுத்துவதற்காக அவரால் வழங்கப்பட்ட உதவி போற்றுதற்குரியது. கோவிட் 19 தொற்றை நீக்குவதற்கான வழிகாட்டல்களையும் அதனுடன் தொடர்பான திட்டங்களையும் நிறைவு செய்வதற்கு அவரால் வழங்கப்பட்ட உதவிகளை இங்கே நினைவுகூறுவது முக்கியமாகின்றது. ரஹ்மான் அவர்கள் இலங்கை துறைமுக பிரிவில் சேவையாற்றியதற்கு மேலதிகமாக பத்து வருடங்களுக்கு மேலாக ஒரு ஊடகவியலாளராக இலங்கை ரூபவாஹினியில் பணிபுரிந்து வந்தார். தமிழ் பேசக்கூடிய அனேகமானோர் மத்தியில் பெயர் பெற்ற இவரின் இழப்பானது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என எம்மால் உணர முடிகிறது .
எமது செய்தி வலைத்தளம் ஆரம்பித்ததிலிருந்து அதன் முன்னேற்றத்திற்காக அவரது நேர்மையான உதவிகளை வழங்கிய ரஹ்மான் அவர்கள் எமது வலைத்தளத்தை தமிழாக்கம் செய்து அதனை பிரபல்யம் அடையச் செய்வதற்காக அதிக உதவிகளை நல்கினார்.அவரது ஆசைப்படி அவர் சொர்க்கத்தில் நுழைய பிரார்த்தனை செய்கிறோம் .